ஒரு சிறந்த சிறுகதையின் கூறுகள்.(என்னளவில்) ...

1. ஒரு கதையின் சிறந்த பாகத்தைச் சுருக்கிச் சிறுகதையாக்கலாம்.

2. ஒரு சிறுகதைக்குள் கட்டாயம் ஒருகதை இருக்க வேண்டும்.

3. அந்தக் கதை குறுகிய எல்லைக்குள்ளாகவே கதைத் தொடக்கம், வளர்ச்சி, திருப்பம், முன் முடிவு ,முடிவு என்ற கூரிய விதிகளுக்கு ஓரளவாது கட்டுப்பட வேண்டும்.

4.அந்தக் கதை அதற்கு முன்னுள்ள கதையையும் பின்னுள்ள கதையையும் யோசிக்க வைத்தே தீர வேண்டும்.

5.பல கதாபாத்திரங்கள், நிறைய தகவல்கள் நிறைந்ததாக இல்லாமலிருந்தால் வாசிக்க சுவாரஸ்யமும் எளிமையுமாக இருக்கும்.

***

வருவதற்கு முன்பிருந்த வெயில் -

கார்ல் மார்க்ஸ்

முன்கூட்டிக் கணிக்க முடியா வாழ்வின் சூழலுக்கேற்ப சமாதனம் தேடும் மனங்களை ஊடறுத்துப் பார்க்கும் கதைகளைக் கொண்ட சிறந்த தொகுப்பென்று இதைச் சொல்வது என் மிகச்சிறிய வாசக அறிவுப் பார்வையே ஆகும்.

10 கதைகள் , ஒவ்வொன்றும் ஒரு வகை. ஒவ்வொரு கதையும் ஒரு உள்ளூரும் துயரத்தை கண்ணீர் பிசுபிசுக்கும் உயிர்ப்போடு பேசுகிறது.

உழைப்பிற்குப் பணயம் வைக்கும் உடல் வலியும், பொருந்தா உறவின் பிரிவும், வறுமையிலும் கைவிடாத பிள்ளையின் கல்விப் பாசமும் , இதயக் கூடு நிறைத்து நின்றும் இணையாக் காதலும், ஏற்றுக் கொள்ளத் துணியும் பிரிவும், துய்க்கும் காமமும், ஆற்றுப்படுத்துமென நம்பும் அழுகையும், ஆறுதலாகும் உறவுகளின் அண்மையும் புரிதலுமென விரும்பியும் விரும்பாமலும் மனித மனம் குவியும் சுழல்களுக்குள் கதையாசிரியரின் பார்வை சுவாரஸ்யத்தோடும் நெருக்கமாகவும் பயணப்பட்டிருக்கிறது.

எளிய நடை, கனிந்த சொற்றொடர்கள், சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த கதைப் போக்கு என அனைத்துக் கதைகளுமே தம்மை வாசிப்பவருக்கு மிக நல்ல அனுபவத்தையளிக்கிறது.

மேற்கண்ட என்னளவிலான சிறுகதைக் கூறுகளுக்குள்ளும் கச்சிதமாகப் பொருந்துகிறது இந்தத் தொகுப்பின் கதைகள்.

சாரு பாராட்டியிருக்கிறார் என்ற போது நான் விரும்பி வாங்கினேன்.

இனிமேலாவது சமகாலத்திய எழுத்துக்களை வாசிக்கலாமென்று தொடங்கிய எனக்கு இந்தத் தொகுப்பு அத்தனையொரு மகிழ்வான தொடக்கத்தையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது.

தொகுப்பில் எனக்குப் பிடித்த "மகிழம்பூ" கதையை எழுதிய கைகளை என் கைகளுக்குள் கொஞ்ச நேரம் பொத்தி வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.