பனி குல்லா - கவிதைக்காரன் இளங்கோ 
திரு. எஸ். ரா. அவர்களின் ஒரு உரையில் அவரின் பாராட்டைக் கேட்டு உங்களின் பனி குல்லா தொகுப்பை இன்று கோவை புத்தகக் கண்காட்சியில் வாங்கி வந்து வாசித்தேன்.

ஒரே அமர்வில் 9 கதைகளையும் வாசித்து விட்டேன்.

புதித கதைக்களன்கள். அதிலும் நவீனம் மேம்பட்ட உரையாடல்கள். அத்தனை கதைகளும் நேர்த்தியாகவும் ஆழமாகவும் இருந்தது. இன்றைய காலகட்டத்தைப் பிரதிபலிப்பதான கதைகளத் தேர்வு அத்தனை கதைகளையும் இன்றைய நெஞ்சோடு பொருத்திப் பார்க்கச் செய்கிறது.

ஒரு சில கதைகளில் கொஞ்சம் நகர்ந்தால் சுஜாதாவிடம் போய்ச்சேர்ந்து விடும் மொழி மிகவும் கவனமாகக் கையாளப்பட்டிருக்கிறது.

தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள் முள் மற்றும் தொட்டிச் செடி.

1.தையல் -

கதையில் முடிவில் மூன்று பெண்களுக்குமாக சூழ்நிலைகள் தவிர்த்த ஒரு நெருங்கிய ஒரு தொடர்பு இருக்குமென நம்பி ஏமாந்தேன். (ஒருவேளை இருந்தால் என் அறிவுக்கு எட்டவில்லை என சமாதானப் படுகிறேன்.)

2.தொட்டிச் செடி -

இரண்டு பெண்களுக்குள்ளான நட்பை இத்தனை அழகான ஊடுருவியிருக்கிறீர்கள். அது அத்தனை நெகிழ்ச்சியாக இருந்தது. பெண் தோழிகளுக்குள்ளான ஒரு நெருக்கம் அது மிகவும் ரசிக்கத்தக்கது.
அவர்களுக்கிடையிலான பரஸ்பரத்தை ஆன்மாவாகப் பிரதிபலித்திருந்தது கதையில் சொல்லாடல்.

என் வீட்டினருகில் ஒரு ஐம்பத்தைது வயதைக் கடந்த ஒரு பெண் தனது சிநேகிதி தனது பள்ளிக்காலத்தில் தனக்கு எழுதிய கடிந்தங்களை எனக்கு வாசிக்கக் கொடுத்த போது இந்தக் கதையில் வருவதைப் போன்றே தோழிகளுக்கிடையான ஒரு செல்ல மொழியில் தமது திருமண வாழ்வின் நிறை குறைகளையும் அதன் பொருட்டு பிரிந்த நட்பின் ஆறாத் துயங்களையும் அது வெளிக்காட்டுவதாக எழுதப்பட்டிருந்தது.

இக்கதை முழுக்க நான் இவர்களைத்தான் கதையின் நாயகிகளாக உருமாற்றிக் கொண்டு படித்தேன். என் மனதுக்கு நெருக்கமான ஒரு கதையாக இக்கதை மாறிவிட்டது.

சிவாவும் , லாவ் வும் மகிழ முடித்திருக்கறீர்கள் அது இன்னமும் திருப்தியைத் தந்தது. நம் வாழ்வினை அர்த்தப்படுத்தப் படைக்கப்பட்டிருக்கும் பெண்கள் எந்நேரமும் மகிழவே நாம் விரும்புவோம்.

உண்மையாகவே என்னால் சொல்ல முடியும் ஆண்களின் நட்புகளை விட பெண்களின் நட்புகள் கொஞ்சம் அன்பிலும் நெருக்கத்திலும் உயர்ந்ததுதான். என் பார்வை இது.

3.நேற்று என்று ஒன்று இருந்தது. -

ஒரு நல்ல அனுபவப் பயணம். பேருந்தில் ஒரு முதியவருக்கும் ஒரு இளைஞருக்குமான உரையாடல். அதன் மூலம் அந்த இளைஞன் பெறும் வாழ்வனுபவம். அதை எழுத்தாக்க முடிவு செய்வதே கதை.

4.பனி குல்லா -

இதுவரைக்குமாக சிறுகதையில் இக்கதையின் நாயகி பல முறை பதிவு செய்யப்பட்டிருக்கிறாள். ஆனாலும் இக்கதையில் கதையில் முடிவில் வேறுவிதமான பார்வைக்கு இடம் மாறுகிறாள். அவர்( நாயகி) செய்யும் பனி குல்லா விற்கும் தொழில் முதல் முறையாகப் பதியப்பட்டிருக்கிறதென்றே நினைக்கிறேன்.

5.மீண்டும் ஒரு முறை -

ஒரு ரொமாண்டிக் ட்ரேஜடி அனுபவத்தைக் கொடுத்தது. பாலாஜியின் காதலை புவனா ஏற்க வாழ்த்துவோம்.

6.முள் -

ஒரு குறுநாவலுக்கான களம் கதையில் இருக்கிறது. எழுதியும் இருக்கலாமென நினைக்கிறேன். ஆனாலும் இந்த சுருக்கப்பதிவும் அருமை.
ப்ரியாக் குட்டிக்கு எல்லாமே முன்பே தெரிந்திருக்கலாம், மேலும் அந்தக் குடும்பத்தின் பந்தம் இன்னும் ப்ரியாவோடு ஒட்டிக் கொண்டிருக்கலாம், அதைத் தாயுமான தந்தைக்கு வேண்டி வேண்டாமென வைக்கிறாள் என்ற எப்படி வேண்டுமானாலும் விரியக் காத்திருக்கும் கதையின் சொல்லப்படாத பக்கங்கள் வாசகரின் கற்பனைக் கேற்ப எத்தனை வேண்டுமானலும் விரித்தும் கொள்ள நிறைய இடம் கொடுத்திருக்கிறீர்கள்.

ரோசம் பாசத்திற்கு அணையாக நிற்காதென்ற முடிவை மாற்றும் கதையுச்சம் ஆச்சர்யமே.ஆனாலும் இக்காலத்தில் உறவுகளின் மீதான சம்பிரதாயக் கட்டமைப்புகளைக் கேள்வி கேட்கவும் செய்கிறது.

கதைக்கு சம்பந்தமா இல்லையா எனத் தெரியாத சுகுமாறன் தான் எனக்கும் இன்னும் முள் போல உறுத்திக்கொண்டே இருக்கிறான்.

7.மூன்றாம் கண் -

காலமாற்றத்தில் நிகழ்ந்த அகமும்புறமுமான மாற்றங்கள் அடுத்த நொடி ஆபத்துக்களறியாத மனித மனங்களின் மீது செலுத்தி வரும் ரகசியத் தாக்குதல்களையும் அதன் மூலம் பயன்பெற்று வரும் துரோகங்களையும் , இழந்து நிற்கும் கண்ணியங்களையும், மென்மையாக ஞாபகப்படுத்தி வன்மையாக கண்டிக்கிறது.

8.வளைவு -

வளைவுகள் நிறைந்த வாழ்க்கைப் பாதையின் ஒவ்வொரு திருப்பத்திலும் நமக்குக் கிடைக்கும் வெகு இயல்பான பாடங்களை அதனினும் வெகு இயல்பான மனித சந்திப்பு மற்றும் பிரிவுகளின் மூலம் காட்டுகிறது கதை.

கதையில் இடையில் திவ்யா - மோகினிக்குக் தனது கதையில் நமக்கு ஏற்கனவே சொல்லப்பட்ட பாதியிலிருந்து மீதிப் பாதிக்கு சட்டென்று தாவும் பாய்ச்சல் சாதுர்யமானது.

9.வெயிலுக்கு இதமாய் ஒரு கோல்ட் காபி -

தொடக்கம் கோல்ட்டாக ஆரம்பித்து வளரச்சியில் மிகவும் சூடேறி சூடேறி முடிவு ஒரு ஹாட் காபியாக மாறியிருந்தது. கச்சிதமான நவீன உரையாடல்கள் மூலம் கதையின் த்ரில்லர் இயல்பு கடைசிவரை மாறாமலிருத்த முடிந்திருக்கிறது.

இவை அனைத்துமே எனக்கு இக்கதைகளைப் படித்த உடன் தோன்றிய எண்ணங்களே.

ஒரு சுவாரஸ்யமான வாசிப்பை விரும்பும் அனைவருக்கும் இத்தொகுப்பை எந்தச் சந்தேகமுமின்றி பரிந்துரைக்கிறேன்.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.