நூலாம்படை - கு.விநாயக மூர்த்தி

சுமார் 10-15 வரிகள் ...
ஒவ்வொரு வரிக்கும் தனித்தனி அர்த்தம் ...
அந்த வரிகளை தனியாப் படிச்சாலும் புரியல...
ஒட்டுமொத்தமாகச் சேர்த்தாலும் புரியல ...
அந்த பத்தி அமைப்புக்கு ஏதாவது ஒரு புதிய காலத்தைக் குறிக்கும் "த்துவ" அடையாளம் ...
அந்த வரிகள எழுதின எழுத்தாளரே வந்து அது என்ன அர்த்தத்தில் எழுதப்பட்டதுன்னு விளக்கம் கொடுத்தாலொழிய இதுக்கு என்ன அர்த்தம்னு விளங்காத அலுப்பு அல்லது விளங்கிக் கொள்ளப் போதிய அறிவின்மை ...

இந்த சிக்கல்களை இதுவரைக்குமான உங்கள் கவிதை வாசிப்பனுபவத்தில் நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ?

இந்தத் தொகுப்பு அச்சிக்கல்களைத் தீர்த்து வைத்து சில எளிய மொழியின் கவிதைகளின் மூலம் நம்மை மகிழ்விக்க வந்திருக்கிறது.

கவிதையின் பலவகைகளை வாசித்திருக்கிறோம். ஒரு கவிதை அது முடியும் தருவாயில் அதுதான் கொண்டுள்ள ஒரு பேருணர்வை நம் மனதுள் வெடித்துப் பிரிந்து நிறைக்க வேண்டுமென்ற குறைந்தபட்ச வேண்டுதலையே நல்ல கவிதையின் இலக்கணமாய் நான் கொண்டுள்ளேன். அதைச் செய்யாத கவிதைகளை நான் நமக்குத் தான் புத்தியில்லையோ என்று கருதி திரும்பவும் வாசித்துப் பார்க்கிறேன். அப்போதும் அது கட்டுடையாமல் என்னைப் பதம் பார்க்கும்.

அப்படியான ஒரு சூழலிலும் நேரத்திலும் இந்தத் தொகுப்பு நம்மை நிறைய ஆசுவாசமடையச் செய்ய வந்திருக்கிறது.

வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் ரசித்து ருசித்து அனுபவித்து வாழும் ஒரு மனிதன் தான் கண்ட ஒவ்வொரு மனதுதொடும் காட்சியையும் கவிதையாகப் படைத்திருக்கிறார். அவரின் சொற்கள் வரிகளாக நீள நீள அக்காட்சி நம் கண்முன்னே விரிகிறது. வாழ்வு வாழ்வதற்கே என்ற கூற்று ஒரு சிறு செயல்போல அர்த்தம் பெறுகிறது இவரின் கவிதைகள் மூலம்.

ஒரு கதைசொல்லல் போலான கவிதையமைப்பு நமக்கு மிகவும் நெருங்கி வந்து நம் மனதோடு பேசும் ஒரு குரல் போல கவிதையைக் கதைபோல எந்தவொரு பூடகப் பூச்சுகளும் மொழி விளையாட்டுகளும் மேதமைத் தோரணையுமின்றி மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் தான் சொல்ல வந்ததை வாசகனிடம் வாஞ்சையோடு பேசுகிறது. இதையெல்லாம் இந்த மனிதன் எப்படி வார்த்தைப்படுத்தினார் என்ற பிரமிப்பு கவிதை முடியும் வரியில் அனிச்சையாய் நம் முன்னே எழுகிறது.

தொகுப்பிலிருக்குன் அத்தனை கவிதைக்குள்ளும் ஒரு உயிர் இருக்கிறது. படித்து முடிக்கும் கணத்தில் உங்கள் மனதில் வேர்பிடித்து வளரத் தொடங்குகிறது. புன்னகையென்றால் முகம் மலரவும் கண்ணீரென்றால் அது நம் கையில் பிசுபிசுக்கும் அளவுக்கு உண்மையாக இருக்கிறது. அந்த உயிர்தான் இந்தக் கவிஞரை அவரின் கவிதைகளை இத்தனை தூரம் ரசிக்கச் செய்கிறது.

பாரதி போல வறுமையில் வாடி நின்ற போதும் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா"என்ற வார்த்தைகளை "இந்த வாழ்க்கை எனக்கு மிகுந்த சோர்வைத் தருகிறது"என்று தினமும் ஒருமுறையாவது புறவெளியில் பகிரும் கு.விநாயக மூர்த்தி அவர்களால் தான் காணும் அத்தனை சோகக் காட்சிக்கு மத்தியிலும் மறைந்திருக்கும் இன்பத்தையும் எழுதிக் காட்ட முடிகிறது.

கவிதைகளை மேற்கோள் காட்ட வேண்டுமென்றால் தொகுப்பின் ஒவ்வொரு கவிதையையும் எடுத்துக் காட்டிப் பேச வேண்டுமென்பதாலும் அப்படி நான் பேசிவிட்டால் அந்தக் கவிதைகள் தன் உயிரான ஓடுடைத்து உடல் சிதறும் என்பதாலும் நீங்கள் வாங்கி வாசித்து அந்தப் புத்தனுபவங்களில் திளைக்க வேண்டுகிறேன்.

இந்தத் தொகுப்பின் வாசிப்புக்குப் பின் கு.வி. யின் கண் கொண்டு உயிர் நிறைந்த உலகத்தை உளம் திறந்து இனிமேலாவது இருக்கும் நாட்களில் பார்க்கத் தொடங்கலாமாவென யோசிக்கிறேன். ஒரு சிறு அசைவிலும் பெரு நிகழ்விலும் நாம் காணும் ஒரு அழகியலை அல்லது துன்பியலை இத்தனை ஒரு கூர்மையான பார்வை கொண்டு பார்க்கவும் அதைப் பதியவும் முயற்சி செய்ய ஆசைகொள்கிறேன்.

அழகுச் செல்லத் தமிழரசியையே தனது அத்தனை பாத்திரங்களாகவும் வடித்துவிட்ட தமிழரசி கனவு எதார்த்தத்தில் பலிக்க வாழ்த்துகிறேன்.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.