தாழம்பூ - பொன்முகலி

நமக்காக எழுதப்பட்ட,
நாம் எழுதியிருக்க வேண்டிய என்று
நம் மனதொடும் வாழ்வோடும் தொடர்புபடுத்திக் கொள்கிற கவிதைகளை நாம் எப்போதும் வியப்போம் விரும்புவோம். நெஞ்சோடு சேர்த்து வைத்துக் கொள்வோம்.

அப்படியான கவிதைகள் ஒரு தொகுப்பு முழுக்க இருக்குமாயின் என்ன சொல்வதென்றே தெரியாமல் ஆனந்த அதிர்வில் அசையாமல் நிற்போமே அந்த மனநிலையைத் தான் இந்தத் தொகுப்பு தருகிறது.

எளிய மொழியில் எழுதப்பட்ட கவிதைகள் வாசகனின் கைபிடித்துக் கொண்டமர்ந்து ஆசை தீரக் காதலின் விருப்பு வெறுப்புகளை பேசுகிறது. இடையே கசியும் கண்ணீரைத் தானே துடைத்துக் கொண்டு வீராப்பும் பேசுகிறது.

எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்துகொண்டு இயற்கை உள்ளிட்ட கூட்டு வாழ்வியலின் மாய எதார்த்தத்தைப் பற்றி உரையாடுகிறது.

"கொஞ்சம் காலாற நடப்போம் வா ..." எனக்கூட்டிக் கொண்டு போய் நம் தோள்மீது கைபோட்டுக் கொண்டு நிலையாமைகளின் இருள் பக்கங்களை அறிமுகப்படுத்துகிறது.

சில சமயம் கால்வலிக்கிறதா என்று கூடக் கேட்காமல் நீள்கவிதைகளாக நீளும் அன்பின் உரையாடல்களில் நாமும் நம் லயித்துப் போய் கதைகேட்க நின்றுவிடுகிறோம்.

'கைகொள்ளா' வாழ்வு தரும் வலி ஒவ்வொரு கவிதையின் மேலும் விசம் போல தடவப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாகச் சுவைத்துப் பார்த்தபின் அது மென்மதுரமாக உருமாற்றமடைகிறது. கடைசியில் அது விசமும் மதுரமும் கலந்த மயக்க மருந்துபோல நம்முடலில் ஏற்றப்பட்டு சுகவாழ்வெனும் மாயத் தோற்றத்திற்கு அடிபணியச் சொல்கிறது.

சுய அழிவைச் சுமூகப்படுத்தும் இன்மைகளின் நிறைகொண்ட காதல் வாழ்க்கையின் அக புற மாற்றங்களை இக்கவிதைகள் ஒரு மெல்லிசையைப் போல வசீகரக் குரலில் சுகமாகப் பாடுகிறது.

வலிய உணர்வுவெளிப்பாடுகளுக்கும் எளிய சொற்தேர்வுகள், வெளிக்கொண்டு வரவிரும்பியதைச் சமரசமின்றிக் கூற எடுத்துக்கொண்ட மிகக் கச்சிதமான சிறிதும் பெரிதுமான கவிதை வடிவங்கள் என தொகுப்பு ஒரு நிறைவைத் தருகிறது.

சில கவிதைகள் நான் முகமூடி போட்டு மறைத்து வைத்திருக்கும் முகத்தின் முன்பு நின்று என் மனசாட்சியைக் கேள்விகள் கேட்கும்போது வார்த்தைகளின்றி உடைந்துவிடவும் வாய்ப்பிருந்தது.

பிடித்த கவிதைகள் எதுவென்றால் முழுத்தொகுப்பையையுமே ஒவ்வொரு கவிதையாகப் பதிவிட்டுப் பேசி உங்களுக்கு அறிமுகப்படுத்தும் ஆசையும் வியப்புமிருக்கிறது.

தமிழினியின் பதிப்பு அத்தனை நேர்த்தியாக வந்திருக்கிறது. நல்ல காகிதமும் தெளிவான அச்சும் வாசிப்பைச் சுகமாக்குகிறது.

என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கவிதைகள் பல கொண்ட இத்தொகுப்பை எனக்கு பிடித்த கவிதைத் தொகுப்புகளில் எந்நாளும் நீங்கா இடம்கொடுக்கவே விரும்புகிறேன்.

மஞ்சள் வெயில், மீகாமத்தோடு காதலின் பரிசாக இதையும் இணைத்துக் கொள்ளலாம் ...

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.