ராஜன் மகள் - பா. வெங்கடேசன்

செதுக்கிருக்காங்க ...
இழைச்சிருக்காங்க ...
நுட்பம் அப்படிங்குற வார்த்தைக்கு இன்னும் என்னென்ன வேறு சொல் இருக்கோ எல்லாம் தகும் இந்த புத்தகத்துக்கு ...
நீண்ட வாக்கியங்களால் அமைக்கப்பட்ட பெரிய பத்திகளைக் கொண்ட 4 குறுநாவல்கள் இப்புத்தகத்தின் அடக்கம்.
ஒவ்வொரு குறுநாவலும் அது எழுதப்பட்டிருக்கும் விதம் குறித்தே மிகுந்த பிரமிப்படையச் செய்கிறது. மிக மிக ஒரு கவனமான வாசிப்பையும் புத்தி ஒருங்கமைப்பையும் கோருகிறது ஒவ்வொரு வரியும்.
எழுத்துக் கூட்டி வாசிக்கத் தெரியுமென்ற தற்குறி அறிவோடு இக்கதைகளை நான் வாசித்துணர்ந்தேனே தவிர இக்கதைகளில் நிலவும் தத்துவ தளங்களிலும் அறிவார்ந்த ஆய்வுப் பக்கங்களிலும் எழுத்து கோரும் நுண்ணறிவுகளையும் நான் ஊடுருவிச் செல்ல முயலவில்லை சொல்லப்போனால் இயலவில்லை.
நிறைவேறாக் காதல்களக் மையப்படுத்தியதான கதைகளான குறு நாவல்களின் சுருக்கக்கதை என்பது ஒன்றிரண்டு குறும்பத்திகளில் சொல்லிவிடக்கூடியதுதான். ஆனால் அதை அவர் சொல்லியிருக்கும் விதம் பிரம்மாண்டம். நின்று நிதானமாக மொழி,கதை மாந்தர்களின் மனம், காலம், கனவு , உரையாடற்களற்ற பத்தி அமைப்பு,நிறுத்தற்குறிகளற்ற வாக்கியங்கள்,எனத் தேர்ந்த புது நடையைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.
ஒரு பத்தியில் உறுப்பான ஒரு பக்கத்தின் முதல் வரி ஒரு பூமாலைக்கட்டின் முதல் வரிசைபோல அவிழத் தொடங்கி மெல்ல அத்தனை அழகோடும் நேர்த்தியோடும் கீழே இறங்குவது போல அமைக்கப்பட்டிருக்கிறது. ஏன் இந்த எழுத்து பல பத்திகளாகப் பிரிக்கப்படவில்லையென்று எனக்கு இப்போது தான் தெளிகிறது. அப்படி அமைத்திருந்தால் வாசிப்பின் சுகமும் சுவையும் கட்டாயம் இந்த அளவுக்குத் தேர்ந்ததாக இருந்திருக்காது.
நான் நோயுற்றிருக்கும் கடந்த மூன்று நாட்களில் மிகத்துயருற்ற உடலும் மனமும் கொண்டிருந்த போது படித்த இந்தப் புத்தகம் என்னை மேலும் உடையச் செய்தது. என் அறை முழுக்க இந்தக் கதாபாத்திரங்களின் குரல் ஒலிப்பது போல எனக்கு இப்போதும் தோன்றுகிறது.
எழுத்துன்னா என்ன எழுத்தாளர்னு சொல்லிக்க என்ன வேணும்னு புத்தகத்தப் படிச்சுப்பார்த்து கத்துக்கனும். வெறுமனே காட்சிகளைக் கடத்துவதல்ல நாவலும் கதையும். அதைக் கடத்தும் விதத்தில் இவர் செய்திருப்பது பெரிய மேதமைத்தனத்தோடு கூடிய கூறல்

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.