மாயக்குதிரை - தமிழ் நதி.

இப்படியாக இந்த ஞாயிறும் என் ஞாபகக் கலனில் நல்ல பொழுதாக சேகரமாகியது.

10 கதைகளில் ஈழத்தில் போர்க்காலத்தில் உடைந்த பல மனதுகளும் தொலைந்த பல உறவுகளும் சிதைந்த பல வாழ்வுமே விரவிக் கிடக்கிறது.

மனக்கோலம் கதை பெரிதாக அதிரச் செய்தது. யுத்தக்காலத்தில் பெண்களடைந்த கொடூரம் ராசாத்தி அக்காவின் கத்தலாக காதுக்குள் இன்னும் ஒலிக்கிறது.

நித்திலாவின் புத்தகங்கள் என்னை இந்தப் புத்தகம் வாசிக்கும் போதும் திட்டிக் கொண்டே சாப்பாடு பறிமாறிக்கொடுக்கும் என் தாயை நினைவுபடுத்தியது.

தாழம்பூ,தோற்றப் பிழை கதைகள் மாயத்தைக் காட்டின. குழப்பமான மன நிலையிலிருந்து மீளும் அல்லது மீண்டுவிட்ட மனதின் நிலையாமைகளைப் பேசியிருக்கிறது.

கடன் கதை என் நிகழ்காலத்தில் நான் சுதாரிக்க வேண்டிய அச்சத்தையும் முன்னறிவிப்பையும் கொடுத்திருக்கிறது.

மாயக்குதிரை கதை ஏதாவது மாயச் சுழலில் தம்மைப் பலிகொடுத்துவிட்டு மீண்டுவர இயலாமல் சுழலும் அநேக மனதுகளின் துக்கக் கதைகளின் பிரிதிநிதித்துவம் பெறுகிறது.

கறுப்பன் பூனைக்குட்டி என் நேசக்கைகளுக்குள் பத்திரப்படுத்தப்படும்.

தொகுப்பில் எனக்குப் பிடித்ததான மலைகள் இடம் பெயர்வதில்லை கதை ஒரு போதும் திரும்பாத தன் பால்யத்தையும் சிதைந்தழிந்து விட்ட தாய்நாட்டின் கோலத்தையும் கண்ணீரொழுக கண் முன்னே நிறுத்தியது.

தமிழ்நதியவர்களின் தேர்ந்த மொழியிலும் கூர்மையான பார்வைகளின் வெளிப்பாடான சொற்றொடர்களிலும் கதைகள் நல்ல அனுபவத்தைத் தருகிறது.

ஈழம் தன் கண்ணீரை இப்படியான இறவாக் கதைகளாக நம் முன்னே நிறுத்தும். நாமும் வாழ்வு முழுக்க அதையொரு குற்ற உணர்வோடு படித்துக் கடப்பதல்லாமல் வேறொருன்றும் செய்வதறியாமல் நிர்க்கதியாய் நிற்கத்தான் போகிறோம்.

இனிமேலுள்ள நாட்களிலாவது அங்கு அமைதி நிலவட்டும். அம்மனிதர்கள் தம் வாழ்வை மகிழ்வோடும் அன்போடும் கழிக்கட்டுமென வேண்டுகிறேன்.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.