ராக்கெட் தாதா - கார்ல் மார்க்ஸ்

இந்தத் தொகுப்பை ஏன் நிறைய பேர் பரிந்துரை செய்தார்களென்ற விளக்கத்துக்கு சில கதைகளே பதிலாகப் போதுமென்றிருக்குறது.

நிழல் என்ற கதையைத்தான் முதலில் படித்தேன். மனதில் மிகவும் பாதிப்பை உண்டாக்கிவிட்டது அந்த ஒரு கதையே. மொத்தத் தொகுப்பின் முழுப்பதமறிய அந்த ஒரு கதையே போதுமாயிருந்தது. கதை முடியும் போது சந்திராவுக்காகவும் இறந்துவிட்ட அவரின் மகனுக்காகவும் கண்ணீர் துளிர்த்திருந்தது.

சித்திரங்கள் - நாம் இழந்து வரும் அல்லது நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நமக்கு சகஜமாக்கப்பட்டு வரும் குடும்ப உறவின் சிதைவுகளை அத்தனை நிகழ்கால உண்மைகளோடும் உளவியலோடும் கூறுகிறது. பெண்ணின் மீறல்களுக்கு கேள்வி கேட்கும் ஆண் மனம் ஆணின் மீறல்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளுமா என்ற கேள்வியை நம்முள் ஏற்படுத்தி முடிகிறது கதை.

சுமை - ஒரு முக்கோணக் காதல் கதை முடிவில் ஒரு பச்சிளங்குழந்தையின் மறைவில் ஒரு மிகப்பெரிய இழப்பையும் குற்றத்தையும் கைக்கொண்டதில் ஒரு ஒழுங்கான வழிக்கு வரும் போது உண்மையான காதல் சிறைக் கம்பிகளுக்கிடையில் துளிர்க்கிறது.

கிறக்கம் - சாராயம் குடிப்பதின் சல்லாபப் பக்கங்களை பெரும் நகைச்சுவையோடு பேசுகிறது.

காஃபி ஷாப் - இலக்கியம் வளர்ப்பதில் சமூக ஊடகங்களின் பங்கை பரிகாசத்தோடும் பரிதாபத்தோடும் கூறுகிறது.தற்கால இலக்கிய உலகின் ஆளுமைகள் மற்றும் இளைய அங்கத்தினரின் அந்தரங்க அல்லது வெளிப்படையான நடவடிக்கைகளைக் காட்சிப்படுத்துகிறது. சுதந்திர வெளியில் திளைத்து, கட்டுப்பாடுகளற்ற நவயுகக் கோட்பாடுகளைக் கடைபிடிக்கும் இரண்டு பெண்களின் வழியாகக் கதை சொல்லியது சமூக ஊடகத்தின் எல்லைகளற்ற எதார்த்தமான விரிவைக் காட்டுகிறது.

படுகை - ஒரு தேடப்படும் குற்றவாளியைக் காத்திருந்து பிடிக்கும் காவலர்களின் உடலும் மனமும் அடையும் சிரமத்தை பேசுகிறது. சில மணி நேரக் காத்திருப்பிற்குப் பிறகு அகப்பட்டது குற்றவாளியா காவலர்களா என்ற திருப்பத்தைக் கதை முடிவில் நிறுத்தியிருக்கிறார்.

சுமித்ரா - பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்கான எதிர்காலம் குறித்தும் திருமணம் குறித்தும் அடையும் மன வருத்தத்தைப் பேசுகிறது.

பிரார்த்தனை - கலவியை நிகழ்த்த ஒரு பெண்ணிடமான ஒரு ஆணின் வேட்கையெனவும் போகத்திற்கான கூடும் உடலும் மனமுமிணைய நிகழும் ஒரு மாயச் செயலை ஒரு தாந்திரீகச் செயல் போலக் காட்டும் கவிதை மொழியில் பேசுகிறது. பெண்ணிடம் ஆணின் இறஞ்சுதலா வேண்டலா எனக்கும் தெரியவில்லை. இந்தக் கதை பற்றிய அறிவு எனக்கு இவ்வளவுதான். ஆசிரியரின் எண்ணத்துக்கு நியாயம் சேர்க்குமா தெரியவில்லை என் புரிதல்.

ராக்கெட் தாதா - வெளி நாட்டு வேலைக்கும் பணத்திற்கும் விற்றுவிட்ட வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கையை சுகித்திருக்க வேண்டிய இளமையை அனுபவித்திருக்க வேண்டிய அன்பின் அருகாமையை மொத்தமாக இழந்துவிட்ட ஒரு மனிதனின் கதையை விசனத்துடன் கூறுகிறது. தாவூத் மெஹ்ருன்னிசாவுக்குக் கொடுத்த முதல் முத்தத்திற்கும் கடைசி முத்தம் இடையில் கடந்து விட்டிருந்தது காலமல்ல கனவுகளாக மாறியும் மறைந்தும் போன காதல். மலையாளத் திரைப்படம் "பத்தேமாரி"யை நினைவு படுத்தியது இந்தக் கதை. கதை நாயகர் தாவுத்தை மம்முட்டியாகவே கண்டேன் நான்.

கற்படிகள் - வாழ்க்கையில் இழப்பின் பாதிப்புகள் கடந்த காலத்தை நாம் நடந்துவந்து திரும்பிப் பார்த்து நிற்கும் ஒரு அருவருப்பான பாதையைப் போல காட்டுகிறது. தன் இளமைக் காலங்களில் தவறவிட்ட பொருளாதார வளர்ச்சியும் அதற்குப் பலியான தன் காதலின் நினைவுகளும் கடைசிகாலங்களில் கழுத்தை நெரிக்கும் ஒரு மனிதனின் கதை. குளத்தின் நீர்பரவி நிற்கும் கற்படிகளில் பரவும் குளிர் மருண்ட மனதை மௌனமாக ஈரப்படுத்தி சாந்தப்படுத்துகிறது. மகிழம்பூ கதையில் கடைசியாக கோவிலுக்குள் போகும் நாயகனை மீண்டுமொரு முறை கண்ட நினைப்பு.

இது எல்லாமே நான் மிக மிகக் குறைவாகக் கூறிய கதை சுருக்கங்களே. இந்தக் கதைகளை மார்க்ஸ் சொன்ன விதம் அத்தனை இதம். மொழியும் கூறலும் வாசிக்க அத்தனை சுகமாக இருக்கிறது. சுலபத்தில் மறக்க மாட்டாத கதைகளாக இவைகள் கட்டாயம் உள்ளூறும். கதையை நிறுத்தி நிதானமாக நிறைய விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் பேசுவதன் மூலம் ஒரு கதையை நம் மனதுள் அழுத்தமாகவும் அழகாகவும் ஊன்றுகிறார்.

கார்ல் மார்க்ஸ் அவர்களின் முதல் தொகுப்பில் அருமை என்று கவனம் பெற்ற எழுத்து இரண்டாவது தொகுப்பில் பழுத்து அனுபவமான அட்டகாசமாகும் மிளுரும் எழுத்தாகியிருக்கிறது.

பரிந்துரைந்தவர்களுக்கு நன்றி.

Comments

Post a Comment

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.