பார்த்தீனியம் -தமிழ் நதி

நாவல் வாசிப்பனுபவ பகிர்வு


செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சியிலும் மட்டுமே பார்த்தும் படித்தும் அறிந்து கொண்ட இலங்கைத் தமிழரினப் படுகொலையை ரத்தமும் சதையுமான நாவலாகக் கொடுத்திருக்கிறீர்கள்.

உங்களின் கண்ணீர் நிறைந்த ஒரு வாழ்வையே மிகச் சிறந்த கலைவடிவமாய் மாற்றி காலத்திற்கும் காய்ந்து போகாமலிருக்கச் செய்திருக்கிறீர்கள்.

அந்தக் கண்ணீருக்கான ஆறுதலாகவோ துணையாகவோ எங்களால் உங்கள் முன் நிற்க முடியாமற் போன துரதிர்ஷ்டத்தையும் கண்டுகொள்ளா பெருந்துரோகத்தையும் இன்றும் என்றும் இந்நாவல் சாட்டையாக எங்களை நோக்கி வீசிக் கொண்டேயிருக்கும்.

எத்த்னையோ சோகம் படிந்த அந்த உண்மை நிகழ்வுகளை ஒரு காதல் வழியாகக் கூற நினைத்தமைக்கே வாழ்த்துக்கள்.
உலகக் காதல்களுக்குமுள்ள ஒரு ஒற்றுமை அத்தனையுமே கனவுகளையும் கண்ணீரையும் குழைத்து நிரப்பி கட்டியெழுப்பப்படுவையே.
அதன் வலிமைக்கு அந்தக் கலவையே சாதகமாகவும் பாதகமாகவும் அமைந்து விடுமென்பதை இந்தக் காதல் கதையும் கட்டியம் கூறுகிறது.

ஒட்டுமொத்த இலங்கைத் தமிழ் மண்ணின் ஆண்களின் ஆண்மையாக பரணியும் பெண்களின் கண்ணீராக வானதியும் மாறிப் போயிருந்தார்கள் நாவல் முழுக்கவும், முடிந்த பின்னரும்.

பரணியும் வானதியும் மிக மிக கச்சிதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தக் காலத்திய மனப்பான்மைகளுடன் அழகியற் கூறுகளுடனும் இருவருமே நாவல் தொடங்கிய சிறு நேரத்திலேயே மிக விரைவாக உயிர் பெற்று விடுகிறார்கள்.

அவர்களுக்குள்ளான காதலையும் அதன் பிரிவையும் அந்த ஏக்கக் காத்திருப்பையும் முன் பகுதியிலேயே அத்தனை அழகாகக் காட்டியது மேலும் வாசிப்பைத் தூண்டி விடுகிறது.

பரணியும் வானதியும் என் அறைக்குள் இன்னும் ஒருவித மெல்லிய பயத்துடனும் கட்டுக்கடங்கா காதல் மனதுடனும் அருகருகே இருப்பது போலவே நான் உணர்கிறேன்.

இந்தக் கதை வெறுமனே ஒரு ஆவணமாக கட்டுரைகளாக (ஆனாலும் கட்டாயம்ஆவணப் படுத்த வேண்டியதே) மாறாமல் காப்பாற்ற அதன் கதை மாந்தர்கள் அத்தனை உயிர்ப்புடனும் வார்க்கப்பட்டிருப்பதுதான் காரணம்.

பரணியின் அருகாமையையும் அரவணைப்பையும் இழந்த அப்புவும் அம்மாவும் போல் இன்னும் அந்த மண்ணில் எத்தனை பேரோ நினைக்கவெ கொடூரமாயிருக்கிறது.
அத்தனை பேரையும் அவர்களிருவரே கண் முன் நிறுத்துகிறார்கள். வீட்டிலிருந்து சைக்கிளை எடுத்துப் போன மகன்களை அதற்கு பிறகு பார்க்காமல் போன ஆயிரமாயிரம் அப்புவிடமும் அம்மாவிடமும் ஆயிரமாயிரம் மன்னிப்புகளும் சிரம் தாழ்ந்த பணிதல்களும்.

நல்வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்து வறுமையின் படுகுழியில் வீழ்ந்துவிட்ட தனபாக்கியத்தின் திட்டுகளை அருமை நாயகம் போன்ற பொறுப்பில்லா மனிதர்கள் என்றும் வாங்கிக் கொண்டும் திருந்தாமல் தன் குடும்பத்தை நிலையில்லா வாழ்வை நோக்கைத் தள்ளிக்கொண்டுதான் இருப்பார்கள்.

இயக்கத் தோழர்கள், வகுப்பு தோழிகள் என உயிரையே கொடுக்கும் அன்பு நிறைந்த உன்னதப் பொழுதுகளும்,தன்னலமில்லா விட்டுக் கொடுத்தல்களும், உரிமையான கண்டிப்புகளும் நிறைந்த நட்பின் வாசனை நாவல் முழுக்க நிறைகிறது. கல்லூரித் தோழிகளின் விடுதியறை வாழ்க்கையும் இயக்கத் தோழர்களின் காட்டு வாழ்க்கையும் அச்சு அசலாகப் பதியப் பட்டிருக்கிறது.

தனஞ்செயனின் பெரிய மனதிற்கேற்ப அவர் ஏற்றுக் கொண்ட சுபத்திராவும் நல்வாழ்வு வாழ வாழ்த்துவோம்.

ஜீவானந்தம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறார். புத்தகங்களுடனே வாழ்வதால்.

மதுரன், பொழிலன், முகிலன், சீலன், வதனன், மரியான்,அமுதினி,மலர்விழி, என எத்தனை அழகான உயிருள்ள தமிழ்ப் பெயர்கள்.

மக்கள் நல்வாழ்வுக்குத் தன் இன்னுயிரைப் பணயமாக்கி திலீபன் மரிக்கும் சம்பவமும் , இந்தியப் படை அமைதி, சமாதானம் என்ற பெயரில் தமிழர் நிலத்தில் நிகழ்த்திய பேரட்டூழிய சம்பவங்களும் மனத்திரை விட்டு நீங்கவே நீங்காமல் இன்றும் கோபமாகவும் தாங்கமாட்டா இயலாமையுமாகவே எஞ்சி நிற்கிறது.

வானதியைச் சீண்டிய காவலனின் கையை வெட்டவும் அவளைக் காத்த காவலனின் கடமை அதுதானென்று கூறவும் எம் மனம் என்றைக்குமாக நிற்கும்.

தம் மக்களின் என்றைக்குமான உரிமைக்காகவும் உன்னத வாழ்வுக்காகவும் தம் வாழ்க்கையையும் வளர்ச்சியையும் கனவுகளையும் குடும்பத்தையும் உறவுகளையும் கடைசியாக உயிரையும் அர்ப்பணித்துக் கொண்ட அண்ணையையும் அவரின் தம்பிகளையும் என்றும் வணங்குகிறேன்.

இப்படி தாய் தந்தை, நண்பர்கள், தோழிகள், நல் உறவுகள் என எல்லோரையும் இழந்து உயிரை விட்டவர்களையும் உயிரோடிந்தால் போதுமென நாடு விட்டவர்களையும் நினைக்க நினைக்க இந்தப் பாவங்களுக்கு பரிகாரமாக ஏதாவது செய்யாமல் கைகட்டி வாய்மூடி வேடிக்கை பார்த்த சாட்சியாக நின்று கொண்டிருக்கிறோமே என கதறுகிறது மனது.

தன் இனம் அழிப்படுவதைச் செய்தியாகத் தெரிந்து கொண்டு பாட்டும் கூத்தும் விளையாட்டுமென கண்டு களித்து தன்னலத்தோடு நடந்து கொண்ட நான் உட்பட்ட தமிழகம் என்றைக்கும் உங்கள் காலடியில் மன்றாடி மண்டியிட வேண்டும்.

இலங்கை பேரினவாத அரசு, அதற்கெதிரான தமிழ்ப் போராட்ட அமைப்புகளுக்குள்ளான பிரிவினை, தேவைப்பட்டோ படாமலேயோ தலையிட்ட இந்தியாவின் தலையீடு என நாவலுக்குள் இருக்கும் அரசியல் பல சிக்கல் நிறைந்ததாக இருந்தாலும் ஒரு எளிய வாசகனுக்கும் புரிந்து கொள்ளும் படியாக இருந்தது. அந்த அரசியலின் விமர்சனப் பார்வைகளை விரிவாக்கிக் கொள்ளவும் முடிந்திருக்கிறது.

நீங்கள் இக்கதைக்கு வாசகர்களிடமிருந்து என்ன எதிர்வினையை எதிர்பார்த்தீர்கள் என்று தெரியாது ஆனால் ஒரு சாதாரண வாசகனாகிய நான் இக்கதையை ஒரு உணர்வுப் பூர்வமான படைப்பாகவே பார்த்து நெகிழ்கிறேன். அதனால் என்னால் இத்தனையே புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரே ஒரு சிறு சந்தேகம். பொன்கலன் எழுதியதாக வரும் கடிதத்தின் முடிவில் பிரியங்களுடன் தனஞ்செயன் என்று வந்திருக்கிறது. அச்சுத் தவறாக இருக்கலாமென நினைக்கிறேன். பக் -391

முடிவில் என்னை ஏமாற்றி விட்டீர்கள். அத்தனை இழப்புக்கும் அலைக்கழிப்புக்குப் பிறகு அவர்கள் இணைவார்கள் என்றே கடைசிப் பக்கம் வரை வேண்டினேன். பல தாக்குதல்களிருந்து தப்பிப் பிழைத்து உயிரோடிருந்தும் அவர்கள் இணைய முடியாமல் போன அந்த துக்கம் எனக்கு இன்றும் இருக்கிறது. இப்படி அங்கே நிறைய பரணியும் வானதியும் இணைந்து கொள்ள முடியாமல் வாழ்க்கை முழுக்கப் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தாலும் எனக்குத் தெரிந்த பரணியும் வானதியும் அத்தனை காதலோடு வாழ்விலும் இணைந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். என் காதலையும் போல அவர்களும் வாழ்வதற்கான ஆயிரம் ஆசைகளையும் கனவுகளையும் கொண்டிருந்தாலும் சூழ்நிலைகளால் பிரிந்தது என்னை மேலும் வீழ்த்தியது.

இன்னும் நிறைய எழுத தோன்றுகிறது. உணர்வுகள் வார்த்தைகளாக வர மறுக்கிறது.

இத்தனை கண்ணீரும் இழப்புகளும் துரோகங்களும் நிறைந்த அந்த வாழ்வை சுமந்து திரிந்து அதை ஒரு தமிழிலக்கியப் படைப்பாக மாற்றியிருக்கிற உங்கள் நெஞ்சுக்கு என் நல்லணைப்புகளும் நல்லாதரவுகளும்.
இனிமேலுள்ள உங்கள் வாழ்வேனும் மகிழ்வும் அமைதியும் நிறைந்ததாய் அமைய வேண்டுகிறேன். வாழ்த்துகிறேன்

Comments

Popular posts from this blog

தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்.

பிடிமண் - முத்துராசா குமார்