நிலம் பூத்து மலர்ந்த நாள் - மனோஜ் குரூர்
தமிழில் - கே.வி.ஜெயஸ்ரீ


இரண்டு மிகப்பெரிய ஆச்சரியங்கள் இந்நாவல் வாசிக்கையில் ...

ஒன்று தமிழரின் சங்ககால வாழ்வைப் பேசும் இந்த நாவலை இன்றைய மலையாளி ஒருவர் மலையாளத்தில் எழுதியிருக்கிறார்.

இராண்டாவது மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பென்று ஒருபோதும் நம்பிவிட முடியாததும் முதலில் மூலமாகத் தமிழிலேயே தான் எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று நம்பும்படியாகவும் செய்திருக்கும் அற்புதமான மொழிமாற்றம்.

மன்னனைப் பாடிப் பரிசில் பெற்று வாழ்வு நடத்தும் பாணர் மற்றும் கூத்தர் குலத்தின் புலமையும் வறுமையும் ஒன்றுக்கொன்று இணைந்தே தொடரும் வாழ்வியலைச் சொல்ல ஒரு பாணர் குழுவின் இடப்பெயர்ச்சியில் தொடங்கும் கதை ஒரு குடும்பத்தில் மையம் கொண்டு அக்குடும்ப உறுப்பினர்களான தலைவன் - கொலும்பன், மகள்கள், மகன்கள் , நண்பர்கள் ஆகியோரின் அறிவு, புலமை, திறமை, காதல், களவு, துரோகம், வலி, ஏமாற்றம், கடைசியாக தப்பித்தலுக்கான வழியாக நாடுவிடுதலும் எதிர்பாரா மரணமும் என்று படர்ந்து பிரம்மாண்டமான வரலாற்றின் ஊடாகப் பல கிளைகளாக விரியும்.

மூவேந்தர்கள், அதியமான், நன்னன், வேள்பாரி போன்ற மன்னர்களின் கொடைத் திறங்களையும் படை வலிமைகளையும் சூழ்ச்சிகளையும் சுயநலத்தையும் அதிகார வெறியாட்டங்களையும் ஆடம்பரக் கொண்டாட்டங்களையும் கபிலர்,பரணர், ஔவைபோன்ற சங்கக் கவிகளின் புலமையையும் புகழையும் அவர்களுக்கு மன்னர்களோடிருந்த நெருக்கத்தையும் நீதி தவறாத பார்வைகளையும் குறவர், உழவர்,கோவலர் வேளிர், பரதவர், உமணர் குடிகளின் வசதியையும் வரையறுக்கப்பட்ட வாழ்வையும் தோழமையையும் தொண்டையும் மற்றவர்களின் மீதான அன்பான அணுக்கத்தையும் இயல்பான ஈகையையும் தமிழர் தம் மரபிலூறிய பண்பாட்டு படிநிலை வாழ்வையும் கழுகுப் பார்வையிலும் கச்சிதமாக பழமையைப் பகிர்ந்தளிக்க வேண்டியே நோக்கத்தோடும் கலையார்வத்தோடும் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

மாம்பழம் எடுத்துத் தின்றதற்காய் கொல்லப்படும் சிறுமியின் கதை தொட்டு வேள்பாரி வஞ்சகத்தால் வீழ்த்தப்படுவதும் தொடர்ந்து பாரிமகளிர் நிர்க்கதியாவதும் பறவைக்காதலன் எயினி கொல்லப்படுவதும் நன்னன் தலைமறைவாவதும் மூவேந்தர்கள் கூட்டுத் திட்டத்தால் சிற்றரசர்கள் வெல்லப்படுவதும் வெட்டப்படுவதும் தோற்றவர்களும் ஆநிரைகள் கவரப்படுவதும் பெண்களை சிறை வைப்பதுமென நாவல்களில் ஏராளமான சங்ககால வரலாறு மீள்ப்பார்வைக்கு வந்திருக்கிறது.

மொழிபெயர்ப்பென்றால் என்ன என்பதற்கான சாட்சியாக இருக்கும் இந்த படைப்பு. அதுவும் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மாற்றிய போதும் இதுவரைக்குமாக மலையாள வார்த்தைகளையே எழுதி வாசிப்பைக் கசப்பாக்கினார்கள் என்ற இத்தனை காலமாக திகழ்ந்து வந்த இழுக்கையும் கொடுமையையும் தம் மொழியறிவாலும் சங்கப்புலமையாலும் அற்புதமாய்த் தவிர்த்திருக்கிறார் ஜெயஸ்ரீ அவர்கள். பலவரிகள் திரும்ப திரும்ப படித்து மகிழ்வுறும் கவிதைத்தன்மையோடு வெளிப்பட்டிருக்கிறது .அவருக்கு விருது வழங்கியன் மூலம் சாகித்ய அகாதமி பெருமைப்பட்டுக் கொண்டது.

ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டியதும் சிறிது உச்சமாய்ச் சொல்லப் போனால் நம் பழமைகளை நாமே திரும்பக் கண்டடைந்து ஆய்வுக்குட்படுத்தி மேலும் இதுமாதிரியான படைப்புகளை படைக்க வேண்டியதுமான களத்தைக் கைகாட்டியிருக்கிற நாவல்.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.